ஜப்பானின் ஐச்சி நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் செப்டம்பர் 25 அன்று மனுஷ் ஷா மற்றும் தியா சித்தாலே ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவின் அரையிறுதிக்கு முன்னேறியது. ஹாங்காங்கின் டூ ஹோய் கெம் மற்றும்வோங் சுன் டிங் ஜோடியை 11-6, 13-15, 11-9, 11-5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி பதக்கத்தை உறுதி செய்தது.

டூ ஹோய் கெம் மற்றும் வோங் சுன் டிங் ஜோடி உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருந்ததுடன், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பதக்கங்கள் வென்ற அனுபவம் கொண்டது. இதற்கு முன்பு அந்த ஜோடியிடம் மூன்று முறை தோல்வியடைந்திருந்ததாகத் தியா தெரிவித்திருந்தார். எனினும் முந்தைய ஆட்டங்களில் கிடைத்த அனுபவத்தையும் எதிரணியின் ஆட்டமுறையையும் கணக்கில் கொண்டு திட்டமிட்ட இந்திய வீரர்கள் இம்முறை வெற்றியைத் தங்கள் பக்கம் திருப்பினர்.
குறிப்பாக, இரண்டாவது ஆட்டத்தை இழந்த பின்னரும் இந்திய ஜோடி தளரவில்லை. மூன்றாவது ஆட்டத்தில் மீண்டும் முன்னிலை பெற்று நான்காவது ஆட்டத்தையும் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்ததுடன் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கமும் உறுதியானது.
அரையிறுதியில் இந்திய ஜோடிக்கு எதிராகக் களமிறங்கியது சீனாவின் வாங் சூச்சின் மற்றும் சன் யிங்ஷா இணை. இருவரும் ஒலிம்பிக் சாம்பியன்களும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முன்னதாகத் தங்கம் வென்றவர்களுமாவர். ‘ஷா-டோ’ (Sha-Tou) என்ற பெயராலும் அறியப்படும் இந்த ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் உலகின் மிக வலுவான இணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்திய வீரர்கள் முதல் ஆட்டத்தில் கடுமையாகப் போட்டியிட்டாலும் சீன ஜோடி 11-8 என்ற வித்த்யாசத்தில் வென்றது. அடுத்த ஆட்டத்தில் 11-5 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சீன அணி, மூன்றாவது ஆட்டத்திலும் 11-8 என முன்னிலை பெற்றது. நான்காவது ஆட்டத்தை 11-2 எனக் கைப்பற்றி 4-0 என்ற கணக்கில் போட்டியை முடித்தது. இதனால் இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.
டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அரையிறுதியில் தோல்வியடைந்த அணிகளுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் முறையின் அடிப்படையில் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய ஜோடி வெண்கலத்துடன் போட்டியை நிறைவு செய்தது.
மனுஷ் ஷா மற்றும் தியா சித்தாலே இருவரும் 2023 அக்டோபரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்து விளையாடத் தொடங்கினர். இடது கை வீரரான மனுஷின் தாக்குதல் ஆட்டமும், வலது கை வீராங்கனையான தியாவின் கட்டுப்பாடு மற்றும் பந்தைச் சரியான இடத்தில் செலுத்தும் திறனும் ஒருவருக்கொருவர் துணையாக அமைந்துள்ளன.
இரட்டையர் போட்டிகளில் தனிப்பட்ட திறமை மட்டும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பந்தை யார் தொடங்குவது, அடுத்த நகர்வுக்கு யார் இடமளிப்பது, எதிரணி பலவீனத்தை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற அம்சங்களில் இருவருக்கும் புரிதல் தேவை. மனுஷின் வலுவான தாக்குதலுக்கு ஏற்ற வகையில் தியா புள்ளிகளை உருவாக்கித் தருவதும் நீண்ட போராட்டத்திற்குச் செல்லாமல் வாய்ப்புக் கிடைக்கும் தருணத்தில் புள்ளிகளை முடிப்பதும் இவர்களின் ஆட்ட அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். 2026 ஜனவரியில் ஓமானில் நடைபெற்ற போட்டியிலும் இந்த ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. சர்வதேச சுற்றுப்போட்டிகளில் கிடைத்த இத்தகைய அனுபவங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி போன்ற பல நாடுகளின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் அரங்கில் அவர்களுக்கு உதவியிருக்கலாம்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பதக்கம் வெல்வது எளிதானதல்ல. சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் இந்த விளையாட்டில் நீண்டகாலமாக வலுவான வீரர்களையும் கட்டமைப்பையும் கொண்டுள்ளன. ஹாங்காங் அணியும் சர்வதேச அளவில் போட்டியிடும் திறன் கொண்டது. எனவே இத்தகைய அணிகளைத் தாண்டிப் பதக்க மேடையை அடைவது இந்திய வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க சவாலாகவே இருந்து வருகிறது.
2018 ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அச்சந்தா சரத் கமல் மற்றும் மணிகா பத்ரா இணை கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றது. அதன் பின்னர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 இல் சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்றபோது, சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி இணை மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றது. அந்தப் போட்டியில் இந்திய ஆடவர் அணியும் வெண்கலப் பதக்கம் பெற்றது.
மனுஷ் மற்றும் தியா இணையின் வெற்றி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் கலப்பு இரட்டையர் பிரிவுக்குக் கிடைத்த இரண்டாவது பதக்கமாக அமைந்தது. மேலும், தொடர்ந்து மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடர்களில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர். இது தனித்தனி வீரர்களின் சாதனைகளைக் கடந்து சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவின் தொடர்ச்சியான இருப்பைக் காட்டுகிறது.

