
சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்து ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிபோடுமா? சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அனோஜன் சிவராசாவின் வழக்கு இந்தக் கேள்வியை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது. மதத்தை அவமதிக்கும் வகையிலான ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக முதலில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட அவருக்கு பின்னர் மேல்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, அவரைக் காப்பாற்ற இலங்கை அரசு சட்டரீதியான மற்றும் தூதரக முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், கல்முனைக்கு அருகிலுள்ள நட்பிட்டிமுனையைச் சேர்ந்தவர் அனோஜன் சிவராசா. இயந்திரப் பொறியியல் கல்வி பயின்ற அவர், வேலைவாய்ப்புக்காக 2025 செப்டம்பரில் சவுதி அரேபியாவுக்குச் சென்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள தொழிற்சாலையில் தொழில்நுட்பப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் சமூக வலைத்தளப் பதிவு தொடர்பான வழக்கு அவரது வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.
2026 ஜூலை 1 அன்று அவர் கைது செய்யப்பட்டதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. முகமது நபியை அவமதிக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் கருத்தை கோபத்தின் காரணமாகப் பதிவிட்டதாகவும் பின்னர் அதை நீக்கிவிட்டு மன்னிப்புக் கோரும் காணொளியை வெளியிட்டதாகவும் அனோஜன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அம்னெஸ்டி கூறுகிறது.
அனோஜன் மீதான வழக்கை அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் விசாரித்தது. 2026 ஜூலை 27 அன்று சவுதி அரேபியாவின் இணையக் குற்றச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதம் அப்போதைய மதிப்பில் சுமார் எட்டு லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமம் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அரசுத் தரப்பும் தண்டனையை மாற்றக் கோரி மேல்முறையீடு செய்ததாகத் தமிழ் கார்டியன் வெளியிட்டுள்ள விரிவான செய்தி தெரிவிக்கிறது. இணையக் குற்றச் சட்டத்தின் கீழான தண்டனைக்குப் பதிலாக ஷரியா சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பது அரசுத் தரப்பின் கோரிக்கையாக இருந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.
2026 செப்டம்பர் 17 அன்று கிழக்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இது ஷரியா சட்டத்தின் கீழ் ‘ஹத்’ (Hadd) தண்டனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இலங்கை வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் செப்டம்பர் 18 அன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் கொழும்பில் உள்ள சவுதி தூதரகம் வழியாகத் தொடர்பில் இருப்பதாகவும், அனோஜனின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது.
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, அனோஜனின் பெற்றோரைச் சந்தித்தபோது சவுதி அரேபியாவின் அரசரிடம் கருணை கோருவதாக உறுதியளித்ததாகச் செய்திகள் வெளியாகின. மேலும் வழக்கின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் குழு சவுதி அரேபியாவுக்குச் சென்றது. அக்டோபர் 10 அன்று வெளியாகிய செய்தியின்படி அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மாற்றக் கோரும் மேல்முறையீட்டை சவுதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. சாதகமான முடிவு கிடைக்காவிட்டால்,சவுதி அரேபிய அரசரிடம் கருணை மனு சமர்ப்பிப்பதும் பரிசீலனையில் இருப்பதாக செய்தி வெளியிட்டது.
இலங்கை அரசின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேல்முறையீட்டின் முடிவு குறித்த உறுதியான அறிவிப்பு வெளியாகும் வரை அனோஜனின் சட்டரீதியான நிலை குறித்து இறுதி முடிவுக்கு வர முடியாது. இந்த வழக்கில் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், அனோஜனின் சிறை நிலை குறித்தும் கவலை எழுந்துள்ளது. அக்டோபர் தொடக்கத்தில் அவர் சிறையில் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தகவல்கள் வெளியானதாகத் தெரிகின்றன. அவரது தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தகவலை இலங்கை அதிகாரிகள் சவுதி சிறை அதிகாரிகளிடம் விசாரித்தனர்.
அக்டோபர் 7 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவலின்படி தூதரக அதிகாரிகள் சிறைக்குச் சென்றபோது, மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட மோதலில் அனோஜனின் முகத்தில் கீறல்கள் ஏற்பட்டதாகச் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.
ஒரு மதத்தை அவமதிக்கும் கருத்துகள் பலரின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடும். அதே நேரத்தில், அத்தகைய கருத்துகளுக்கான சட்டரீதியான பதில் என்னவாக இருக்க வேண்டும் அதற்காக விதிக்கப்படும் தண்டனை எந்த அளவுக்கு இருக்கலாம் என்பவை மனித உரிமை விவாதங்களில் முக்கியமான கேள்விகள்.

